ஏன் இளையதளபதி விஜய்????
சில நிமிடங்களுக்கு முன்னர் இணைய உலாவின் போது ஒரு வசனத்தை வாசிக்க முடிந்தது. “ஹீரோயின் ஆட ஹீரோ பார்த்துக்கொண்டு இருந்தால் அது அஜித் படம், ஹீரோ ஆட ஹீரோயின் பார்த்துக்கொண்டு இருந்தால் அது விஜய் படம், ஹீரோவும் ஆடாமல் ஹீரோயினையும் ஆட விடாமல் இருந்தால் அது சூர்யா படம்” என்பதே அது. அறிவு பூர்வமானது கூட…
அலுவலகத்தில் இந்நாட்களில் வேலை வெட்டி குறைவு என்பதாலும், பல இணையத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதாலும், வடிவேலு சொல்லுவதை போல சும்மா இருப்பது ரொம்ப கஷ்டம் என்பதாலும் வந்த வினை தான் இந்த ஆக்கம். (உருப்படியா இருக்கோ இல்லையோ நீங்களும் இப்ப வேலை வெட்டியை விட்டு விட்டு வாசிங்க போஸ்…..)
விமர்சனங்கள் எழுத ஆசையாக இருப்பதனால் நண்பன் படம் பற்றியும் எழுத வேண்டும் என நினைத்தேன்; ஆனாலும் இயலவில்லை. பார்த்தது முதல் நாள் காட்சி என்பதால் ரசிகர் கூட்டத்தில் (எங்களை போல) கை தட்டல்களும், சிரிப்பொலிகளும் விண்ணை மட்டுமல்ல எங்கள் காதையும் சேர்த்து பிளந்தது. இதனால் படத்தை முழுவதுமாக இரசிக்க முடியவில்லை. திரும்பவும் படத்தை பார்த்து எழுத வினைகிறேன்.
எப்பொழுதுமே சிலர் எங்களை (விஜய் ரசிகர்களை) இரசனை இல்லாதவர்கள் எனவும் நாங்கள் அவர்களை மொக்கை அறிவு கூடிய ரசிகர்கள் என்று கூறுவதும் வழக்கமாகி விட்டது. பல விஜய் எதிர்பாளர்களிடம் “எங்கள் வழி எங்களுக்கு.. உங்கள் வழி உங்களுக்கு…” என்று கூறி விஜய் ஸ்டைலில் “கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” என்று சொல்வதும் வழக்கம்.
அதனாலே நீங்கள்……
விஜய் எதிராளி என்றால் (Anti Vijay Jerks) – Ctrl + W
இக்கட்டுரையின் நோக்கம் விஜய் சிறந்த நடிகரா இல்லையா என்பதல்ல. விஜய் சிறந்த நடிகர் என்பதற்கு 1997 ம் ஆண்டு காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ் நாடு மாநில சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தே சான்றாகும். விருதுகளையும் தாண்டி இளையதளபதி விஜய் ஏன் பலரது (என்னை போன்றவர்கள் ) மனங்களில் இடம் பிடித்திருக்கிறார் என்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
ரஜினி காந்த் ரசிகர்கள் ரஜினி காந்த்தை சூப்பர் ஸ்டார் என்றழைப்பர், கமல் ஹாசனை உலகநாயகன் என்றழைப்பர், அஜித் ரசிகர்கள் அஜித்தை தல என்றழைப்பர், ஆனால் விஜய் ரசிகர்கள் மட்டும் விஜய்யை, அண்ணா என்றே அனேகமாக அழைக்கின்றனர். ஒருவரை, கூடப்பிறந்த இரத்த உறவாக, வீட்டில் ஒருவராக, பிள்ளைகளில் ஒருவராக உள்ளங்களில் இடம் கொடுப்பது சாதாரண விடயம் அல்ல; அதே போல் இடம் பிடிப்பதும் சாதாரண விடயம் அல்ல.
அண்ணன் இளையதளபதி விஜய் அவர்கள் இவ்வாறு சிறு குழந்தை முதல் முதியோர் வரை தங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைக்கப்படுவதற்கு திரையில் தோன்றி நடிப்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது; அதையும் தாண்டி அவருடைய தனிப்பட்ட, சொந்த வாழ்க்கையும் மிகவும் சிறப்பானதாகவே இருந்திருக்கிறது; இருக்கிறது.
விஜய் இயல்பாகவே அமைதியான சிரித்த முகத்துடன் காட்சி தருபவர். அதே போல் நகைச்சுவை உணர்வும் கொண்டவராகவே பார்க்கப்படுகின்றார்.
இளம் பருவத்தில் “ராஜாவின் பார்வையிலே” திரைப்படத்திலிருந்து செந்தூரப்பாண்டி, பிரெண்ட்ஸ், நண்பன் என பல திரைப்படங்களில் சிவாஜி கணேசன், அஜித், விஜயகாந்த், சூர்யா, ஜீவா, ஸ்ரீ காந்த், சத்தியராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகர் எங்கள் இளைய தளபதி விஜய் ஆவார். இவ்வாறு பல முன்னணி நடிகர்களுடன் போட்டி, பொறாமை இன்றி நடித்திருப்பதன் மூலம் நட்புக்கு இலக்கனமாவே இருக்கிறார். ரசிகர்களுக்கும் கற்று கொடுக்கின்றார். வேலாயுதம் திரைப்படத்தில் ஜெயம் ரவி பல ஆலோசனைகள் கூறியதன் காரணமாக ரவியும் விஜய்யுடன் மேலும் நெருக்கமாகிருக்கிறார் என்பது திண்ணம். இவ்வாறு பல நடிகர்கள் இளையதளபதி விஜய்யுடன் நெருக்கமாகவே இருந்து வருகின்றனர்.
பல நடிகர்கள் ஒதுக்கிய திரைப்படங்களை மற்ற நடிகர்கள் நடித்து வெற்றி பெற்றவுடன் அது பொறுக்காமல் ஏசித்தள்ளும் இக்கால கட்டத்தில், “நீங்கள் மிஸ் பண்ணி வெற்றி பெற்ற படங்கள் எவை?” என கேட்கும் போது தூள், முதல்வன் போன்ற படங்களை கூறி அதில் நடித்தவர்களையும் பாராட்டும் குணம் கொண்ட ஒரு சிறந்த மனிதர் விஜய் ஆவார்.
கெளதம் மேனன் அவர்கள் காக்க காக்க திரைப்படத்தை முதலில் விஜய்க்கே சொன்னார். ஆனால் விஜய் அதில் நடிக்கவில்லை. அவர் அவ்வேடத்தையும் படத்தையும் கௌரவமாகவே நிராகரித்திருந்தார். இது மீண்டும் கெளதம் மேனனுடன் இணைவதற்கு (யோகன் – அத்தியாயம் ஒன்று ) வழி வகுத்துள்ளது. இதே கெளதம் மேனன் “துப்பறியும் ஆனந்த்” திரைப்படத்தை ஒரு நடிகரிடம் சொல்லி அவர் மறுத்தது மற்றுமன்றி, அது ஊடகங்கள் வரை சென்று மாறி மாறி பேட்டி கொடுத்த வரலாறும் உண்டு. இவ்வாறு மரியாதை அற்ற விடயங்களில் எங்கள் அண்ணன் இளையதளபதி அவர்கள் எப்பொழுதுமே ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது ரசிகர்களையும் அவ்வாறே வழி நடத்தியிருக்கிறார். ஷங்கரின் முதல்வன், ஏ. ஆர். முருகதாசின் கஜினி போன்ற திரைப்படங்களும் விஜய்க்கே முதலில் சொல்லப்பட்டது. தற்பொழுது இவ் இயக்குனர்களுடன் விஜய் இணைந்து படம் பண்ணிக்கொண்டு இருக்கிறார் (ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படம் வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது). விஜய்யின் இப்பண்பால் சினிமாத் துறையில் யாவரும் இணைந்து பணியாற்றவே விரும்புகின்றனர்.
தனது ரசிகர் மன்றத்தை, நற்பணி மன்றமாக மாற்றி ஏழை எளியவர்கள், மாணவர்கள் என பலருக்கு உதவி செய்து வருகின்றமை, அவரது சேவை மனப்பான்மையை எடுத்து காட்டுகிறது. தனது மக்கள் இயக்க கொடியிலே “உன்னால் முடியும், உழைத்திடு உயர்ந்திடு” என்ற சொற்பதர்கள் மூலம் அனைவருக்கும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும், உழைப்பின் மகிமையையும் எடுத்துக் கூறியவர்.
சில நடிகர்கள் கோழைத்தனமாக ரசிகர் மன்றத்தை கலைத்த போது கூட, சில இரசிகர்கள் (என்று சொல்லிக்கொண்ட எதிரணியினர், துரோகிகள்) ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டதாக அறிக்கை விட்ட போது கூட, சில நடிகர்கள் திரைப்படங்கள் மூலம் மட்டுமே வீர வசனங்கள் பேசி சினிமாவுக்கு வருவேன், வர மட்டேன் (வரும் ஆனா வராது என்பது போல) என மாறி மாறி கூறிய போது கூட தைரியமாக கடந்த சட்ட மன்ற தேர்தலில் “ஜே” அணிக்கு வெளிப்படையாகவே ஆதரவு வழங்கி; தனது தைரியத்தை காட்டியதோடு, வெற்றிக்கு வழி வகுத்து இவ் வெற்றியில் தனது பங்களிப்பு “இராமரின் அணில்” போலவே என்று அடக்கமாகவே கூறினார்.
பல ஹீரோக்கள் ஆ, ஊ என்றால் கோர்ட், சூட்டுடன் வலம் வரும் போது மிகவும் எளிமையாகவே பொது நிகழ்சிகளில் அதிரடியாக வருபவர் எங்கள் விஜய்.
தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நிலை நிறுத்திய பிறகு, தனக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு என்று உணர தொடங்கிய பிறகு தனது திரைப்படங்கள் மூலமாக இளைஞர்களுக்கு நல்ல விடயங்களை எண்டுத்து சென்றார்.
சில நடிகர்கள் மது, மாது, சிகரெட் என்பவற்றை வைத்து படம் நடிக்கும் போதும், “மணி, மணி” என்று பணத்துக்காக எதுவும் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் போதும் கூட; போக்கிரி திரைப்படத்தில் “சிகரெட் பிடிக்க வேண்டாம்” என்று அறிவுறுத்திய தோடு “அழகிய தமிழ் மகன்” திரைப்படத்தின் பின்னர் பல சமூக ஆவலர்களின் கோரிக்கையை ஏற்று இனி சிகரெட் பிடிப்பது போன்று நடிப்பதில்லை எனவும் தீர்மானித்தார்.
“வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா???” என்று கேட்டு வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியவர்கள் மத்தியில் “வாழ்க்கை என்பது வட்டம் போல எனவும், மேலிருப்பன் கீழே வருவான், கீழே இருப்பவன் மேலே போவான்” என வாழ்க்கை தத்துவத்தை அழகாக எடுத்துக் கூறியவர்.
என்னை போன்ற சாதாரண இளைஞர்கள் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருக்கும் போது திரையுலகத்தை சேர்ந்த பலரும் இளையதளபதி அண்ணன் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருப்பது மட்டுமன்றி, அவர்களும் தனது இரத்த உறவாகவே நினைத்து அண்ணன் என்று அழைக்கின்றனர். (“திரையுலக அன்பர்கள் விஜய்யை பற்றி……” என்ற தலைப்பில் அடுத்த ஆக்கத்தை எதிர்பாக்கலாம்…).
இவ்வாறு பல நல்ல குணங்கள் உள்ள, சிறந்த வாழ்க்கை வாழும் ஒரு நடிகருக்கு (எதிர்கால தமிழ் நாட்டின் தலைவருக்கு) என்னை போன்ற பல இளைஞர்கள் ரசிகர்களாக இருப்பதில் எவ்வித தவறும் இல்லை என்பதோடு, இவரை விட நல்ல மனம் படைத்த நடிகர் தமிழ் நாட்டில் இல்லை எனவும், நாங்கள் விஜய் ரசிகன் என்று சொல்வதில் சந்தோசப்படுகிறோம் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
மீண்டும் ஒரு ஆக்கத்துடன் சந்திக்கிறேன்…….
“We are always VIJAY FANS™”
Comments
Post a Comment