எது சாதனை??!!
சிறு வயது முதல் (தரம் 4 முதல்) கல்வி நோக்கத்திற்காக சொந்த வீட்டை விட்டு பிரிந்து ஹொஸ்டலில் தங்கியதால் என்னவோ Home Sick எனும் வீட்டு ஏக்கம் வருவது மிக அரிது.
எனக்கு விபரம் தெரிந்து எனது 30 வருட இவ்வுலக வாழ்க்கையில் கடந்த 3-4 வாரங்கள் மிகவும் சோர்வடைந்த நிலையிலே கழிந்தது, ஏன் நான் மனதளவில் உடைந்து விட்டேன் என்றே சொல்லலாம்.
தொடர் வேலைப்பழுவையும் தாண்டி எனது மகளை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டியது.
இறுதியாக கடந்த 29.07.2018 ஆம் திகதி 5 நிமிடங்களே மகளுடன் இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அச்சமயம் அவளது பார்வை என்னால் மறக்கவே முடியாது!!
மற்றவர்களால் எப்பொழுதும் முரடனாய் பார்க்கப்படும் நான் மனமுடைந்து காணப்பட்டேன். எனக்குள் இப்படியொரு மெல்லிய மனம் இருக்கின்றது என்பதை நானே 30 வயதில் தான் புரிந்து கொண்டேன்.
தாய்க்கு, தாரத்திற்கு, சகோதரத்திற்கு, பிள்ளைகளுக்கு என்று ஓடி ஓடி உழைக்கின்றோம். கடைசியில் அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை என்னமோ நாள் கணக்கு என்று நினைக்கும் போது மிகவும் வேதனையளிக்கின்றது.
சில நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு 30 வயசாகிறது எதை சாதிச்சம், எதை கிழிச்சம் என்று. இங்கே நாமும் சந்தோசமாக வாழ்ந்து மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருப்பது தான் சாதனை என்று புரிய 30 வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றது.
மாடி வீட்டில் குடியிருப்பதும், கார் ஓடுவதும்,சொகுசாக வாழ்வதும் சந்தோசம் இல்லை. இம்மாயையிலிருந்து நாம் மட்டுமல்ல நமது உறவுகளும் விடுபட வேண்டும்; இல்லாவிட்டால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம் என்றே அர்த்தம்.
காலையில் வேலைக்கு போய் மாலையில் வீடு திரும்பி குடும்பத்துடன் வாழும் ஒவ்வொருவரும் கொடுத்து வைத்தவர்கள் தான்.
வேலை போனாலும் பரவாயில்லை என்று கொழும்பிலிருந்து மருதமுனைக்கு செல்லும் வழியில் உணர்ந்தது.
இக்கஷ்டத்தில் ஆறுதலாயிருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என்று கூறி நட்பை உதாசீனப்படுத்த விரும்பவில்லை.
Suhail Jamaldeen
11.08.2018
10.03 pm
Comments
Post a Comment